செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக சரிவு

Published On 2019-08-17 04:21 GMT   |   Update On 2019-08-17 04:21 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை தண்ணீர் வரத்து மேலும் சரிந்து 19 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கன மழையல் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால் அந்த அணைகளில் இருந்து 3 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

இதற்கிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒனேக்கலில் நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று மாலை 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. கடந்த சில நாட்களாக அணைத்து அருவிகளையும் தண்ணீர் மூழ்கடித்து வந்த நிலையில் தற்போது ஐந்தருவி உள்பட பல அருவிகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. ஆனாலும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 10-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை தண்ணீர் வரத்து மேலும் சரிந்து 19 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் தற்பேது நீர்வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 111.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 112.49 அடியாக இருந்தது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் கபினி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும்.
Tags:    

Similar News