செய்திகள்
பாலகிருஷ்ணன்

அரசியல் பேசாத ரஜினி மோடியை புகழ்வது ஏன்? - பாலகிருஷ்ணன்

Published On 2019-08-16 05:10 GMT   |   Update On 2019-08-16 05:10 GMT
அரசியல் பேசாத ரஜினி காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியை புகழ்வது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் தேவை. சில மாநிலங்களில் ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற அ.தி.மு.க. தயாராக இல்லை என்பது வேதனைக்குரியது.

மோடி அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகின்ற, முழுக்க முழுக்க அன்னியப்படுத்துகின்ற வகையில் செயல்பட்டு வருகிறது. காஷ்மீரை இரண்டாக பிரித்துவிட்டனர். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மாநகராட்சியை போல் மாற்றி விட்டனர். 32 மசோதாக்களை நிறைவேற்றி ஜனநாயகத்தை பறிக்கும் வகையில் மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது.

காஷ்மீர் பிரச்சினை அரசியல் ஆகிவிட்டது. காஷ்மீர் பிரச்சினையை பற்றி பேசுவதே அரசியல் தான்.

பிரதமர் மோடி ஏதோ சாதனை செய்து விட்டது போல் ரஜினி பேசி வருகிறார். இது உண்மைக்கு புறம்பானது. எந்த நோக்கத்துக்காக மோடியை ரஜினி புகழ்ந்து வருகிறார் என்று தெரியவில்லை. ஏற்கனவே அரசியலுக்கு வருவதாகவும், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அவர் கூறி வருகிறார். அதனால் அவரது பேச்சு அரசியலுக்கு அச்சாரம் போடும் வகையில் உள்ளது.

அரசியல் பேச மாட்டேன் என்று கூறிய ரஜினிகாந்த் காஷ்மீர் பிரச்சினை பற்றியும், மோடி பற்றியும் பேசி அரசியலாக்கி வருகிறார்.

காஷ்மீரில் சுமுகமான நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என மோடியை நியாயப்படுத்தி பேசுவது கூட அரசியல் தான்.

நாட்டின் அரசியல் சட்டம், நிர்வாக அமைப்பை முழுக்க முழுக்க மாற்றி அமைத்து, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என மோடி அரசு நினைக்கிறது. இவர்கள் ஆட்சியில் இது தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலத்திற்கும் ஒரே முதல்-அமைச்சர் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்குவதற்கு ஏதுவாக பயிர்க்கடன், விதைநெல் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் தடங்கல் இருக்கிறது. அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடு இன்றி பயிர்க்கடன் உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News