செய்திகள்
மெயினருவியில் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்த காட்சி

குற்றாலம் மலைப்பகுதியில் மழை - அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2019-08-15 05:53 GMT   |   Update On 2019-08-15 05:53 GMT
குற்றால மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
தென்காசி:

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் நிலவும். அந்த கால கட்டத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

இயற்கை சூழல் நிறைந்த மலைப்பகுதிகளில் பல்வேறு மூலிகை செடிகளுக்கு மத்தியில் பாய்ந்தோடி அருவியாக கொட்டும் குளிர்ச்சியான தண்ணீரில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுப்பார்கள்.

சீசன் காலத்தில் அருவிகளில் உற்சாகமாக குளிக்கவும், குளுகுளு சீசனை அனுபவிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

குற்றால சீசன் காலத்தில் குற்றாலம் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை மற்றும் தென்றல் காற்றுடன் குளுகுளு தட்பவெப்ப நிலையே நிலவும். குற்றால சீசன் இந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்திலேயே தொடங்கியது.

தாமதமாக தொடங்கிய சீசன் ஒரு சில நாட்களிலேயே அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்ததால் களை இழந்தது. சீசன் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையிலும் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் விழவில்லை.

இதனால் இந்த ஆண்டு குற்றால சீசன் இல்லாமல் போய் விடுமோ என்று வியாபாரிகள் மட்டுமின்றி அனைவரின் மத்தியிலும் கவலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் குற்றாலம் மலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் குற்றாலம் மெயின் அருவியில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பகல் 12 மணி அளவில் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அதில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் நேற்று ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இன்றும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டியது. குற்றாலத்தில் வெயில் விட்டுவிட்டு அடித்தது.

குற்றாலத்தில் இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் அவர்கள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றால மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் லேசான சாரலுடன் இதமான கால நிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News