செய்திகள்
செயற்கை இழை ஓடுதளப்பாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த காட்சி.

திருவண்ணாமலையில் ரூ.6 கோடியில் செயற்கை இழை ஓடுதளம்- முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2019-08-14 10:22 GMT   |   Update On 2019-08-14 10:22 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.6 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை இழை ஓடுதளப்பாதையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
சென்னை:

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதியுடன் 6 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் மின்விளக்குகள், நீர்தெளிப்பான்கள் மற்றும் வடிகால் அமைப்பு போன்ற வசதிகளுடன் கூடிய செயற்கை இழை ஓடுதளப்பாதையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், வளை கோல்பந்து பயிற்சி பெறும் கல்லூரி மாணவர்களுக்காக 1 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாணவர்கள் தங்கும் அறைகள், சமையல் அறை, உணவு அருந்தும் கூடம், கழிவறை, குளியலறை, பயிற்றுநர் அறை, காப்பாளர் அறை, படிக்கும் அறை, உடற்பயிற்சி கூடம், பார்வையாளர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறப்பு விளையாட்டு விடுதிக் கட்டடம்.

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் 55 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதிக் கட்டடம்; மதுரை மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதிக் கட்டடத்தில் 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விடுதிக் கட்டடம் என மொத்தம் 9 கோடியே 34 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

ஆஸ்திரேலியா நாட்டின் கான்பெர்ரா நகரில் கடந்த 23.11.2018 முதல் 28.11.2018 வரை நடைபெற்ற காமன்வெல்த் சீனியர் மற்றும் வெட்ரன் வாள் சண்டை வாகையர் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி மற்றும் கே.பி.ஜிஷோ நிதி ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், கத்தார் நாட்டின் தோஹா நகரில் கடந்த 21.4.2019 முதல் 24.4.2019 வரை நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான ஆசிய தடகள வாகையர் போட்டிகளில், ஆடவர் மற்றும் மகளிர் கலப்புப் பிரிவில் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.ஆரோக்கிய ராஜீவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரன், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News