செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலை

மலையை காக்க தவறினால் இனி தண்ணீர் கிடைக்காது - இயற்கை ஆர்வலர் தகவல்

Published On 2019-08-14 08:25 GMT   |   Update On 2019-08-14 08:25 GMT
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தவறினால் அடுத்த தலைமுறைக்கு இனி தண்ணீர் கிடைக்காது என்று இயற்கை ஆர்வலர் ஓசை காளிதாசன் கூறினார்.
திருச்சி:

தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர்களுக்கான கருத்தரங்கு திருச்சி தெப்பக்குளம் பி‌ஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 250 பள்ளிகளில் இருந்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் இயற்கை ஆர்வலர் ஓசை காளிதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு- நீர் மேலாண்மையில் பசுமைப்படை என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மரம் நாம் சுவாசிப்பதற்கு எப்படி ஆரோக்கியமான காற்றை தருகிறது என்பது பற்றி நமது குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். மரங்கள் இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



அதைப்போல் மரங்கள் வளர்ப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும் மாமருந்தாக இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த உலகில் வாழ்வதற்காக தான் நாம் பிறந்து உள்ளோம். பணம் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான். பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.

அடர்ந்த மரங்கள் உள்ள இடங்களை தான் குயில், மயில் உள்ளிட்ட பறவைகள் தங்களது இருப்பிடமாக்கிக்கொள்கின்றன. 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் பறவைகளின் குரல்களோடு தான் காலையில் கண் விழித்தோம். மரங்களுக்கும் நமது பிள்ளைகளுக்கும் மன ரீதியான உறவை ஏற்படுத்த வேண்டும்.அறிவியல் ஒரு பக்கம் வளர்ந்தாலும் இயற்கையின் ஒரு அங்கமான மரம் வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

இல்லை என்றால் எதிர்காலத்தில் தற்போது தண்ணீரை பாட்டில்களில் அடைத்து கொண்டு செல்வது போல் குழந்தைகளின் முதுகில் புத்தக பையுடன் ஆக்சிஜன் சிலிண்டரையும் கட்டி அனுப்ப வேண்டிய சூழல் தான் ஏற்படும். நாம் குடிக்கும் நீரில் 80 சதவீதம் ஆறுகளில் இருந்து தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை வராமல் இருக்கவேண்டுமானால் ஆறுகளையும், ஆறுகளை உற்பத்தி செய்யும் மலைத்தொடர்களையும், குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளையும் நாம் பாதுகாப்பதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தவறினால் அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News