செய்திகள்
பாபநாசம் அணை

100 அடியை தாண்டிய பாபநாசம் அணை நீர்மட்டம்

Published On 2019-08-13 05:28 GMT   |   Update On 2019-08-13 05:28 GMT
பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 100.10 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் இன்று காலை வரை குண்டாறு அணை பகுதியில் மட்டுமே 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், பாபநாசம், தென்காசி பகுதியில் தலா 1 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆனாலும் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1889.35 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 154.75 கன அடி தண்ணீர் மட்டும் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து இன்று 100.10 அடியாக உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இனி இந்த ஆண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. சேர்வலாறு அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் சற்று உயர்ந்து 129.53 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 292 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 60 அடியாக உள்ளது.

சிறிய அணைகளான குண்டாறு அணை முழு கொள்ளளவான 36.10 அடியையும், கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவான 52.50 அடியையும் எட்டி நிரம்பி வழிகிறது. இதுபோல மற்ற சிறிய அணைகளான கருப்பாநதி அணை முழு கொள்ளளவான 72.10 அடியில் இருந்து, சற்று குறைந்து 69.72 அடியாக நிரம்பி உள்ளது. தற்போது அணை பாதுகாப்பிற்காக வருகிற தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையில் தற்போது 73.50 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை தற்போது 65.20 அடியாக தண்ணீர் நிரம்பும் தருவாயில் உள்ளது.

132.22 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணையில் இன்று காலை 116.75 அடியாக நீர்மட்டம் உள்ளது.

இன்று நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லை. செங்கோட்டை, குற்றாலம் பகுதிகளில் மட்டும் லேசாக சாரல் மழை அடித்தது. தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்தால், பாபநாசம் அணை பாசனத்திற்காக விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News