செய்திகள்
அமைச்சர் பாண்டியராஜன்- தமிழிசை சவுந்தரராஜன்

உண்மையை தெரிந்து பேச வேண்டும்- விஜய்சேதுபதி கருத்துக்கு பாண்டியராஜன், தமிழிசை கண்டனம்

Published On 2019-08-12 09:04 GMT   |   Update On 2019-08-12 09:04 GMT
காஷ்மீர் விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன், தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

நடிகர் விஜய்சேதுபதி ஆஸ்திரேலியாவில் பட விழாவில் கலந்து கொண்டார். அங்குள்ள வானொலிக்கு அவர் அளித்த பேட்டியில் காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்று விமர்சித்தார்.

இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

நடிகர் விஜய்சேதுபதி நல்ல நடிகர். அவர் கருத்து தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால் எந்த பிரச்சனை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் சட்டம் 370, 35ஏ ஒரு வரலாற்றுப் பிழை. அது சரி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி போன்ற கலைஞர்கள் முதலில் அந்த சட்டத்தில் என்னதான் இருக்கிறது என்று பின்புலத்தை ஆராய்ந்து படித்து கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கூறியதாவது:-

நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையில் நடிகர்கள் கருத்து சொல்லும் போது அவர்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் அதிகாரப்பூர்வமாக பேசுகிறார்கள். காஷ்மீரை பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள் என்று ஒரு நடிகர் கூறுகிறார்.

அப்படியானால் அவர் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துதான் பேசுகிறாரா? என்றால் இல்லை. இதில் பெரியாரையும் துணைக்கு இழுக்கிறார்கள்.

காஷ்மீர் பிரச்சனையை மத்திய அரசு சரியாக கையாண்டு வருவதாக பல வெளிநாடுகள் பாராட்டி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News