செய்திகள்
கோபண்ணா

வரலாறு தெரியாமல் பேசுகிறார்- வைகோவுக்கு கோபண்ணா கண்டனம்

Published On 2019-08-12 07:32 GMT   |   Update On 2019-08-12 07:32 GMT
காஷ்மீர் விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக வைகோவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று பாராளுமன்ற தேர்தலை சந்தித்த ம.தி.மு.க. ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.யானார்.

மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அவர் காங்கிரசை கடுமையாக சாடினார். காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே மூலக்காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரசின் தயவுடன்தான் வைகோ மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த வைகோ காங்கிரஸ் தயவை நான் என்றைக்குமே எதிர் பார்த்தது இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் தான் நான் எம்.பி. ஆனேன் என்பது தவறு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்னை எம்.பி.யாக தேர்வு செய்து அனுப்பி உள்ளார் என்று பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவும் வைகோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற ஆகஸ்டு புரட்சி தின கருத்தரங்கில் பேசிய அவர் கூறியதாவது:-

நேருவுக்கும், ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்பின் காரணமாகவே காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. இதனால் காஷ்மீருக்கு நேரு சிறப்பு அந்தஸ்தை வழங்கினார்.

இந்த வரலாறு தெரியாமல் வைகோ காங்கிரசை விமர்சித்து வருகிறார். பாராளுமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 7 நிமிடத்தில் 6 நிமிடங்கள் காங்கிரசையே தாக்கி பேசியுள்ளார்.

டெல்லியில் அவர் தி.மு.க. எம்.பி.க்களுடன் பேசுவதை விட பா.ஜனதா எம்.பி.க்களுடன் தான் பழகி வருகிறார். காங்கிரசை குறை கூற வைகோவுக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு கோபண்ணா பேசினார்.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமை கட்சிகளான காங்கிரஸ்-ம.தி.மு.க. இடையிலான இந்த மோதல் குறித்து தி.மு.க. சார்பில் யாரும் எந்த கருத்தும் சொல்லாமல் உள்ளனர்.

தி.மு.க. இந்த விசயத்தில் மவுனம் சாதித்து வருகிறது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே சமரசம் எதையும் மேற்கொள்ளாமலேயே உள்ளது. இது தி.மு.க. கூட்டணியில் புதிய சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News