செய்திகள்
கொலையுண்ட தொழில் அதிபர் சுரேஷ் பரத்வாஜ்- கைதான வக்கீல் பிரித்தி

கூலிப்படையை ஏவி தொழில் அதிபரை கொன்ற பெண் வக்கீல் கைது

Published On 2019-08-08 06:51 GMT   |   Update On 2019-08-08 06:51 GMT
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரை கூலிப்படையை ஏவி கொன்ற பெண் வக்கீலை போலீசார் கைது செய்தனர். மேலும் காசிமேடு கடலில் வீசப்பட்ட உடல் இதுவரை கிடைக்கவில்லை.
சென்னை:

அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூ பகுதியில் வசித்து வந்த தொழில் அதிபர் சுரேஷ் பரத்வாஜ், கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி திடீரென காணாமல் போனார்.

காணாமல் போன அன்று தனது செல்போனை கார் டிரைவரிடம் கொடுத்து விட்டு அருகில் உள்ள வக்கீல் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சுரேஷ் பரத்வாஜ் சென்றார். அதன் பின்னர்தான் அவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து அந்த வக்கீல் யார்? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் இறங்கினர்.

அப்போது சுரேஷ் பரத்வாஜ் பிரித்தி என்கிற பெண் வக்கீலை பார்க்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து பிரித்தியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அளித்த பதில் போலீசுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதன் காரணமாக அடுத்த கட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டது.

பிரித்தியை சந்தித்து பேசிய சுரேஷ் பரத்வாஜ், பின்னர் ஆட்டோவில் ஏறிச் சென்றது தெரியவந்தது.

அந்த ஆட்டோ டிரைவர் யார்? என்பதை கண்டு பிடித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுரேஷ் பரத்வாஜை காசிமேட்டில் கொண்டு போய் விட்டதாக கூறினார். இதன் பின்னர் சுரேஷ் பரத்வாஜ் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமலேயே இருந்தது.

இதற்கிடையே அடையாறு துணை கமி‌ஷனராக பொறுப்பேற்ற பகலவன், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தனக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வக்கீல் பிரித்தியின் செல்போன் அழைப்புகளை முழுவதுமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதன்படி பிரித்தி யார்-யாருடன் செல்போனில் அதிக முறை பேசியுள்ளார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்தனர்.

இதில் காசிமேட்டை சேர்ந்த பிரகாஷ் என்கிற குடும்பி பிரகாஷ் என்பவரிடம் பிரித்தி பலமுறை போனில் பேசியது தெரிய வந்தது. அதே நேரத்தில், மாயமான தொழில் அதிபர் சுரேஷ் பரத்வாஜிடமும் அவர் தொடர்ந்து பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் பிரித்தி, குடும்பி பிரகாஷ் இருவர் மீதும் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. குடும்பி பிரகாசையும், அவரது கூட்டாளிகளான மனோகர், சுரேஷ், ராஜா, சந்த்ரு ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் தகராறில் சுரேஷ் பரத்வாஜ் நடுக்கடலுக்கு செல்லப்பட்டு தீர்த்துக்கட்டப்பட்டது தெரிய வந்தது.

காசிமேட்டுக்கு கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி ஆட்டோவில் சென்று இறங்கிய சுரேஷ் பரத்வாஜை, குடும்பி பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் படகில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவரை படகு துடுப்பால் ஓங்கி தலையில் அடித்துள்ளனர். இதில் சுரேஷ் பரத்வாஜ் தலை சிதறி படகிலேயே பலியானார். உடலை நடுக்கடலில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதற்கு பெண் வக்கீல் பிரித்தி உடந்தையாக இருந்து கூலிப்படையை ஏவியதும் வெட்ட வெளிச்சமானது.

தனது வீட்டில் வேலை செய்து வந்த சித்ரா என்ற பெண் மீது சுரேஷ் பரத் வாஜூக்கு மோகம் ஏற்பட்டது. அவரை அடைவதற்கு திட்டமிட்டு அவ்வப்போது பண உதவிகளையும் செய்துள்ளார். ஆனால் சித்ரா வழிக்கு வரவில்லை.

இதனையடுத்து வக்கீல் பிரித்தியை சந்தித்து பேசிய சுரேஷ் பரத்வாஜ், வேலைக்காரி சித்ராவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்காக பிரித்திக்கு, அவர் ரூ.65 லட்சம் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பிரித்தியோ, சித்ராவை சேர்த்து வைக்காமல் இழுத்தடித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் பரத்வாஜ், பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது. பிரகாஷ் தலைமையிலான கூலிப்படையினர், பிரித்தியிடம் பணம் வாங்கிக் கொண்டு சுரேஷ், பரத்வாஜை படகில் கடத்திச் சென்று நடுக்கடலில் வைத்து கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேரும் கைதான நிலையில் பெண் வக்கீல் பிரித்தியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுரேஷ் பரத்வாஜ் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு 1½ மாதங்கள் ஆகிறது. இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை.

கடற்கரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்துக்கு சுரேஷ் பரத்வாஜை நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உடலை கடலில் வீசியதால் உடல் கரை ஒதுங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் பரத்வாஜின் உடல் மீன்களுக்கு இரையாகி இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

சுரேஷ் பரத்வாஜின் உடல் கிடைக்காவிட்டாலும் இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

சுரேஷ் பரத்வாஜ், பிரித்தி ஆகியோரின் செல்போன் அழைப்புகள், வீடியோ காட்சிகள் ஆகியவை கொலை வழக்கில் முக்கிய தடயங்களாக சிக்கி இருப்பதாகவும், இதனை வைத்து வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வாங்கி கொடுப்போம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News