செய்திகள்
மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.

திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் மரணம்- மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published On 2019-08-06 06:53 GMT   |   Update On 2019-08-06 06:53 GMT
மறைந்த தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:

தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் ஆயிரம் விளக்கு உசேன். இன்று மரணம் அடைந்தார் அவருக்கு வயது 81.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான இவர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கி பழகியவர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார்.

சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 5 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் வைக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு லாயிட்ஸ் காலனி, நடேசன் ரோட்டில் உள்ள ஜாஹிர் உசேன் மசூதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மறைந்த உசேனுக்கு மனைவி, 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவரது மருமகன் இறையன்பு குத்தூஸ் தி.மு.க.வின் பிரசார பாடகராக இருந்து வருகிறார்.

ஆயிரம்விளக்கு உசேன் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். வட்ட செயலாளர், 4 முறை பகுதிசெயலாளர், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட துணை செயலாளர், முரசொலி அறக்கட்டளை உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
Tags:    

Similar News