செய்திகள்
நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர் அருகே தந்தை-மகன் கொலை: மதுரை கோர்ட்டில் 6 வாலிபர்கள் சரண்

Published On 2019-07-31 07:37 GMT   |   Update On 2019-07-31 07:37 GMT
கரூர் மாவட்டம், முதலைப்பட்டியில் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை கோர்ட்டில் இன்று 6 பேர் சரண் அடைந்தனர்.
மதுரை:

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை. இவர் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியில் வசித்து வந்தார். இவருக்கு தாமரை என்ற மனைவியும், நல்லதம்பி (45) என்ற மகன் மற்றும் சரஸ்வதி, அன்னலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் நல்லதம்பிக்கு மட்டும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

முதலைப்பட்டியில் ராமருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அவர் அங்குள்ள அய்யனார் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு நல்லதம்பி காலை 8 மணியளவில் தனது தோட்டத்தில் பறித்த பூக்களை விற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். அப்போது அங்கு வந்த சிலர் அரிவாளால் நல்லதம்பியை வெட்டி கொலை செய்தனர்.

அப்போது ராமர் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் தனது பேரனை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக வீடு அருகே காத்திருந்தார். நல்லதம்பியை வெட்டிய அதே கும்பல் அங்கு வந்து பேரன் கண்முன்னே ராமரையும் வெட்டி கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையின் போது முதலைப்பட்டியில் 39 ஏக்கர் ஏரியை 70க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளனர். அந்த ஏரியை மீட்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஒரு வக்கீல் பொதுநலன் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏரியை அளக்க உத்தரவிட்டனர். அதன்படி ஏரியை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடருவதற்கு நல்லதம்பி உதவியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் நல்லதம்பியையும், அவரது தந்தையையும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடரக் காரணமாக இருந்த தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்ற சவுந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று சரண் அடைந்தனர்.
Tags:    

Similar News