செய்திகள்
தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

ஆடி அமாவாசை- மேட்டூரில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

Published On 2019-07-31 07:29 GMT   |   Update On 2019-07-31 07:29 GMT
ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக மேட்டூர் காவிரியில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
சேலம்:

தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் இந்துக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதற்காக மேட்டூர் காவிரியில் ஏராளமானோர் குவிந்தனர். இதற்காக புரோகிதர்கள், சிவாச்சாரியார்கள் மேட்டூர் காவிரி ஆற்றில் திரண்டிருந்தனர்.

பக்தர்களை ஒரே இடத்தில் வரிசையாக அமர வைத்து அவர்களது மூதாதையர்களின் பெயர்களை கூறி வேத மந்திரங்களை ஓதினர். பின்னர் பச்சரிசி மாவு, எள், வாழைப்பழம், தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிண்டமாக பிடித்து மந்திரங்கள் ஓதிய பின் அவற்றை ஆற்றில் கரைத்து தங்கள் முன்னோர்களை நினைத்தும், அவர்களின் ஆசி வேண்டியும் வழிபட்டனர்.

கடந்த ஆண்டு கர்நாடகாவில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணை வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியாற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போதும் மழை பெய்துவரும் நிலையில் மேட்டூரில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இதனால் காவிரியாற்றில் குறைந்த அளவில் தண்ணீர் ஓடுகிறது. அதில் ஆழமான பகுதிக்கு சென்று பக்தர்கள் புனித நீராடினர். இதே போல காவிரி கரையோர பகுதி மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் புரோகிதர்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சுவாமியை வழிபட்டனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. சேலம் அனைமேடு திருமணிமுத்தாற்றிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
Tags:    

Similar News