செய்திகள்
சீனியம்மாள்

சீனியம்மாளுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு

Published On 2019-07-31 06:40 GMT   |   Update On 2019-07-31 06:40 GMT
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்ப உள்ளனர்.
நெல்லை:

நெல்லையை சேர்ந்த தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலைகள் குறித்து பாளை குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளி கார்த்திகேயனை கண்டுபிடித்தனர்.

தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயன், “தனது தாயாரின் அரசியல் வாழ்க்கை சரிந்ததற்கு உமா மகேஸ்வரியே காரணம்” என்று அவரையும், அவரது கணவர் முருக சங்கரனையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், கொலையை மறைக்க பணிப்பெண் மாரியையும் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

மேலும் 3 பேர் கொலையையும் தான் மட்டுமே தன்னந்தனியாக செய்ததாகவும் கைதான கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த 3 பேர் கொலை வழக்கு தி.மு.க. கட்சி சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும், மேலும் தி.மு.க. பிரமுகர்கள் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இருக்குமா? என்று விசாரணை நடத்தவும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. விஜயகுமார் நேற்று நெல்லை வந்து விசாரணையை தொடங்கினார்.

நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. (ஓ.சி.யு.) பிரிவு இன்ஸ்பெக்டர் பிறை சந்திரன் மற்றும் போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் முக்கிய பகுதிகளை பார்த்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக கார்த்திகேயனை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றனர்.

பின்பு நள்ளிரவு 12.40 மணியளவில் நெல்லை ஜே.எம். 5-வது நீதிபதி நிஷாந்தினி முன்னிலையில் கைதான கார்த்திகேயனை ஆஜர்படுத்தினர். நீதிபதி நிஷாந்தினி, கார்த்திகேயனை வருகிற 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து போலீசார் கார்த்திகேயனை போலீஸ் வேனில் ஏற்றி பாளை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இன்று அதிகாலை 1.30 மணி அளவில் கார்த்திகேயன் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 8 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் திறம்பட விசாரணை நடத்திய தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி உள்பட வழக்கில் விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள், போலீசார் உள்பட 50 பேருக்கு விருதும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் விரைவில் குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்த மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கர், துணை கமி‌ஷனர்கள் மகேஷ்குமார், சரவணன் ஆகியோரை தமிழக டி.ஜி.பி. திரிபாதி மற்றும் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆகியோர் பாராட்டினர்.

இந்நிலையில் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவர்களிடம் இன்று வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும், மாநகர போலீசார் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை இன்று சி.பி.சி.ஐ.டி. பிரிவு எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆயத்த பணிகளை அவர்கள் இன்று தொடங்கினர். கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் கோர்ட்டில் நாளை தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு முறைப்படி இன்று சம்மன் அனுப்பப்படுகிறது.



Tags:    

Similar News