செய்திகள்
முத்தலாக் மசோதா

முத்தலாக் சட்டம் வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா?

Published On 2019-07-31 05:19 GMT   |   Update On 2019-07-31 05:19 GMT
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் சட்ட விவகாரம் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர்:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் தடை சட்டம் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதா கடந்த 25-ந்தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து, முத்தலாக் தடை சட்டம் மசோதாவை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார்.

இதற்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ராஷ்டிரிய ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாராளுமன்ற மக்களவையில் இந்த தீர்மானத்தை ஆதரித்து அ.தி.மு.க. ஓட்டுப்போட்டது. ஆனால் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விவாதத்துக்கு பின் வாக்கெடுப்பு நடந்தது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 99 ஓட்டுக்களும், எதிராக 84 ஓட்டுக்களும் கிடைத்தன. காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் முத்தலாக் மசோதா எளிதாக நிறைவேறியது.

முத்தலாக் சட்டம் மீது பாராளுமன்ற மக்களவையில் நடந்த விவாதத்தின் போது அ.தி.மு.க. எம்.பி.ரவீந்திரநாத்குமார் ஆதரித்து பேசினார். அப்போது, ‘இந்த மசோதா மூலம் சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும். இது இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வழங்க வழி செய்யும்’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்துக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுபற்றி பேசிய அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன், ‘முத்தலாக்குக்கு ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்து தீர்ப்பளித்துவிட்டது. இஸ்லாமில் முத்தலாக் அங்கீகரிக்கப்படவில்லை என்று அரசு சொல்கிறது.

எனவே இல்லாத ஒரு வி‌ஷயத்துக்கு ஏன் சட்டம் இயற்ற வேண்டும். இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’ என்றார். அவருடைய எதிர் கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மசோதா வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் சட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். இது இரட்டை வேடம் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

மத்திய அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது வெட்க கேடானது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வின் திடீர் நிலைபாடு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அ.தி.மு.க.வினர் பிரசாரத்தின்போது நாங்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் எனவேதான் முத்தலாக் சட்டத்தை எதிர்த்தோம் என்று கூறி வருகிறார்கள்.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வேலூர் தேர்தலுக்காக அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

எனவே முத்தலாக் சட்ட விவகாரம் வேலூர் தேர்தலில் எதிரொலிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் 2.5 லட்சம் முஸ்லிம் ஓட்டுகள் உள்ளன. கிறிஸ்தவர்களின் ஓட்டு 1.6 லட்சம். மொத்த வாக்காளர்கள் 14.32 லட்சம் பேர். முஸ்லிம்களின் வாக்கு வங்கியை குறி வைத்தே முத்தலாக் சட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
Tags:    

Similar News