செய்திகள்
ஆணவ படுகொலை

ஆணவ படுகொலையை தடுக்க தனிப்பிரிவு தொடக்கம்

Published On 2019-07-30 08:50 GMT   |   Update On 2019-07-30 08:50 GMT
கோவையில் ஆணவ படுகொலையை தடுக்க தனிப்பிரிவு தொடக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தினால் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
கோவை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் நடுரோட்டில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி கவுசல்யா பலத்த வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

வெட்டி படுகொலை செய்யும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இது நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதேபோன்று கோவை மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்த கனகராஜ்- தர்ஷினி தம்பதியை அவரது அண்ணன் வினோத்குமார் வெட்டி படுகொலை செய்தார்.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு ஆவண மற்றும் கவுரவக்கொலைகள் நடந்தன. ஆணவக்கொலை குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை அண்மையில் ஐகோர்ட்டு தனது அதிருப்தியை தெரிவித்தது.

இதனையடுத்து காவல் துறை ஆவண கொலையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் கோவை மாவட்ட சமூக நல அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலப்பு திருமணம் செய்தவர்களை துன்புறுத்தல், மிரட்டுதல் கூடாது. அச்சுறுத்தினால் புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

தனிப்பிரிவு போன் எண் 0422 - 2200777, 94981 01165 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து போலீசார் கூறும்போது, கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆணவ படுகொலை தடுப்பது குறித்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றனர்.


Tags:    

Similar News