செய்திகள்
மைதிலி

திருவாரூர் அருகே வரதட்சணை கொடுமையால் நகைக்கடை உரிமையாளர் மனைவி தீக்குளிப்பு

Published On 2019-07-26 12:42 GMT   |   Update On 2019-07-26 12:42 GMT
திருவாரூர் அருகே, நகைக்கடை உரிமையாளரின் மனைவி வரதட்சணை கொடுமையால் தீக்குளித்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் அருண் (வயது38). இவர் திருவாரூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நகைக் கடை நடத்தி வருகிறார்.

இவருக்கும், திருவாரூர் அருகே உள்ள பருத்தியூரை சேர்ந்த மைதிலி (29) என்பவருக்கும், கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மைதிலிக்கு அவரது பெற்றோர் 60 சவரன் தங்க நகை போட்டு, ஏராளமான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர்.

அருண்-மைதிலி தம்பதியருக்கு தற்போது 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் திருமணம் முடிந்து 2½ ஆண்டுகளான நிலையில் மைதிலியின் கணவர் அருண் மற்றும் மாமனார் இளங்கோவன், மாமியார் கலா ஆகியோர் மைதிலியிடம், உனது பெற்றோரிடம் சென்று மேலும் நகைகள் வாங்கி வரும்படி அடிக்கடி வரதட்சணை கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளனர்.

இதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்னரும் மைதிலியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் வேதனையில் அவதிப்பட்டு வந்த மைதிலி மேலும் மனமுடைந்தார். இதையடுத்து நேற்று இரவு 2 மணி அளவில் வீட்டில் இருந்த தனி அறைக்குச் சென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அருண் மற்றும் வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் ஓடிவந்து மைதிலியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவலறிந்து வந்த வைப்பூர் போலீசார் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்று காலை திருவாரூர் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் மைதிலி மரண வாக்குமூலம் அளித்தார்.

அப்போது தன்னை மேலும் வரதட்சணை கேட்டு கணவர் அருண் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் தினமும் கொடுமை செய்து வந்தனர். இதனால் மனமுடைந்த நான் குழந்தையை தனியே விட்டுவிட்டு தீக்குளித்தேன் என்று கூறியுள்ளார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News