செய்திகள்
கைது

போரூர் அருகே முதியவர் கொலையில் ஓட்டல் ஊழியர் கைது

Published On 2019-07-24 05:22 GMT   |   Update On 2019-07-24 05:22 GMT
போரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொன்ற வழக்கில் ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:

போரூரை அடுத்த மதானந்தபுரம் குருஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சுசீலா. இவர்களது மூத்த மகன் வெளிநாட்டிலும் மற்றொரு மகன் மணிமங்கலத்திலும் வசித்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளாகவே மணிமங்கலத்தில் உள்ள தனது மகன் வீட்டில் சுசீலா வசித்து வருகிறார். இதனால் பாஸ்கரன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வீட்டில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயமும் இருந்தது. அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், 2 மோதிரங்கள் மற்றும் மொபட் ஆகியவை திருடு போயிருந்தது. போலீசார் பாஸ்கரன் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பாஸ்கரனின் செல்போனில் கடைசியாக பேசியவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். இதில் திருமுல்லைவாயிலை சேர்ந்த மன்சூர் முகமது என்பவர் பாஸ்கரனுடன் பேசி இருந்தது.

இதையடுத்து போலீசார் அவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் பாஸ்கரனை அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் போலீசில் கூறியதாவது:-

பாஸ்கரன் வசிக்கும் வீடு அருகே உள்ள ஓட்டலில் நான் வேலை பார்த்து வருகிறேன். அங்கு பாஸ்கரன் அடிக்கடி சாப்பிட வருவார். இதனால் அவரிடம் நன்கு பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் எனக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் குறித்து கூறினேன்.

அதற்கு பண உதவி செய்வதாக என்னிடம் கூறியிருந்தார். இதற்காக அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவர் பணம் வந்த உடன் தருவதாக கூறுவார். சம்பவத்தன்று எனக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

பணம் கொடுப்பதற்காக என்னை அழைக்கிறார் என்று நினைத்து சென்றேன். அப்போது பாஸ்கரன் என்னை ஓரின சேர்க்கைக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நான் செங்கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்தேன்.

இதில் அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார். பின்னர் அவரது நகை மற்றும் மொபட்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டேன். போலீசார் என்னை பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் செல்போன் மூலம் போலீசில் சிக்கிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News