செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: தஞ்சையில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

Published On 2019-07-23 10:02 GMT   |   Update On 2019-07-23 10:02 GMT
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள், பொதுமக்கள் கருப்பு கொடி, வயலில் இறங்கி போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்,

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் போராட்டத்தின் ஒரு பகுதியாக காவிரி படுகை பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கின்றனர்.

இந்த பேரணிக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2000 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், கல்வி உதவி தொகையை வழங்கக்கோரி பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த கல்லூரி பேராசிரியர் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. வகுப்புகளுக்கு செல்லுங்கள். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் கூறினார். மேலும் கல்லூரி கேட் மூடப்பட்டது. ஆனால் மாணவர்கள் கேட்காமல் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் கல்லூரியை விட்டு கேட்டை திறந்து வெளியே செல்ல முயன்றனர். இதையடுத்து மாணவர்களிடம் பேரா சிரியர்கள், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி எங்களது போராட்டம் தொடரும் என கூறி மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வகுப்புகளுக்குள் சென்றனர். 2 மணி நேரம் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க கல்லூரி முன்பு 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News