செய்திகள்
நடிகர் எஸ்.வி.சேகர்

புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன்- நடிகர் எஸ்.வி.சேகர்

Published On 2019-07-23 04:46 GMT   |   Update On 2019-07-23 04:46 GMT
புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யா கூறிய கருத்தை எதிர்ப்பதாக பொள்ளாச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி தமிழிசை சங்கம் சார்பில் நடைபெறும் காமெடி தர்பார் என்னும் நாடக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் பொள்ளாச்சி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

நாடக துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களை ரசிகர்கள் வரவேற்க வேண்டும். நாடகக் கலையின் வளர்ச்சிக்கு அரசு உதவுவது இல்லை. இந்துகளின் கோவிலை இந்துகளிடமே அரசு ஒப்படைக்க வேண்டும். நாடக கலைஞர்களை நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது. நாடக நடிகர்களுக்கு அதிகம் உதவி செய்தவர் ராதாரவி தான். நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஆகஸ்டு 2-ந்தேதி வரை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. விஷால் பொறுப்பில் இருந்தபோது தான் நடிகர் சங்கத்தில் ஊழல் அதிகமாகிவிட்டது.

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யாவின் கருத்தை எதிர்க்கிறேன். தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை கொண்டுவர சூர்யா வலியுறுத்தி இருக்கவேண்டும். மாற்றத்துக்கு ஏற்ற கல்வியை படித்தால்தான் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

தகுதியை தாண்டிய வேலை வாய்ப்பு கொடுக்கப்படுவதாலேயே தமிழ்நாடு கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சிகளால் தான் தமிழ்நாட்டின் கல்வி தரமே சீரழிந்துவிட்டது. ரஜினி கட்சி தொடங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடித்து விட்டார். விரைவில் அரசியலுக்கு வருவார். இதனை கே.எஸ்.அழகிரி விரும்பவில்லை என்றாலும் மு.க. அழகிரி விரும்புவார். விரைவில் தமிழகத்தில் 4 எம்.பி. தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். மழைநீர் சேகரிப்பில் மக்களின் பங்களிப்பு அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News