செய்திகள்
பாபநாசம் அணை

சாரல் மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

Published On 2019-07-22 04:52 GMT   |   Update On 2019-07-22 04:52 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்துள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த அணைகளுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

அதிகபட்சமாக செங்கோட்டை மலையில் உள்ள குண்டாறு பகுயில் 31 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 9 மில்லி மீட்டரும், செங்கோட்டை நகர பகுதியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மற்றபடி தென்காசி, ஆய்க்குடி, கடனாநதி, சிவகிரி பகுதியில் தலா 1 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 1587 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்கு 304.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று 55.85 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 3 அடி உயர்ந்து இன்று காலை 58.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 78.67 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 50.57 அடியாகவும் உள்ளது.

கடனாநதி 44 அடி, ராமநதி-57, கருப்பாநதி-24.61, குண்டாறு-26.12, அடவிநயினார்-65, வடக்கு பச்சையாறு- 2.75, நம்பியாறு-10.03, கொடுமுடியாறு-18 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது.

கேரளாவின் தென்பகுதியில் கனமழை பெய்தால் தான் நெல்லை மாவட்டத்துக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் இதே கால கட்டத்தில் அனைத்து அணைகளிலும் சேர்த்து 54 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 15 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் ஆடி மாதத்தில் கார் சாகுபடிக்கு இதுவரை அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை. அணைகளில் மேலும் நீர்மட்டம் உயர்ந்து பாபநாசம் அணையில் நீர்மட்டம் 80 அடியை தாண்டினால் மட்டுமே விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு போதிய தென்மேற்கு பருவமழை பெய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News