செய்திகள்
சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை ஆடுகள் தின்ற காட்சி.

வறட்சியால் தீவனங்கள் தட்டுப்பாடு - கால்நடைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் கழிவுகள், சுவரொட்டிகள்

Published On 2019-07-22 04:12 GMT   |   Update On 2019-07-22 04:12 GMT
வறட்சியால் தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகளும், சுவரொட்டிகளும் எமனாக மாறி வருகின்றன.
தஞ்சாவூர்:

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கு பெரிதும் துணைபுரிவது கால்நடைகள். இயந்திரமயமாக்கல் காரணமாக வேளாண் பணிகளில் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்தபோதிலும், பால் உற்பத்திக்காக கால்நடைகள் வளர்ப்பு அதிக அளவில் உள்ளது. கால்நடை தீவனம் பற்றாக்குறை, போதுமான தண்ணீர், உணவு கிடைக்காதது உள்ளிட்டவற்றால் கால்நடைகள் மிகுந்த நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

கால்நடைகளுக்கு தேவையான வைக்கேல், புற்கள் இல்லாததால் தெருக்களிலும், சாலையோரத்திலும் குவிந்து கிடக்கும் குப்பைகளை நாடும் சூழலுக்கு கால்நடைகள் தள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு சாலையோரம் கிடக்கும் குப்பைகளை உண்ணும்போது கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் கால்நடைகளுக்கு எமனாக மாறுகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்திருந்தாலும் அவற்றின் பயன்பாடு குறைந்துவிடவில்லை.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் கோடை காலங்களில் சிறிய அளவு தீவன தட்டுப்பாடு இருந்தாலும் பருவகாலங்களில் போதுமான பசுந்தீவனம், காய்ந்த தீவனம் கிடைத்ததால் ஆடுகள் வளர்ப்பில் எந்த சிரமமும் இருந்ததில்லை. தற்போது கோடைகாலம், பருவகாலம் என்ற பாகுபாடு இன்றி எப்போதும் வறட்சி தலைதூக்கி உள்ளதால் ஆடு வளர்ப்பது சவாலாக உள்ளது.

தொடர் வறட்சியால் விளைநிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து ஆடுகளுக்கு புற்கள் கிடைக்கவில்லை. ஆடுகளை விவசாய நிலங்களில் பட்டி அமைத்து ஒரு இரவு கிடைபோட்டால் ஆடுபோடும் எச்சங்கள் நல்ல உரம் என்பதால் ஆடுவளர்ப்பவர் களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டது. ஆனால் பருவமழை பொய்த்த காரணத்தினாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடாததாலும் வயல்கள் எல்லாம் காய்ந்து பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றன. இதனால் மாடுகள், ஆடுகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங்களுடைய மாடுகள், ஆடுகளை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு விடுவர். கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளுக்கு உணவு ஏதோ வடிவத்தில் கிடைக்கிறது. தஞ்சை நகரில் பராமரிப்பு இன்றி சாலைகளில் மாடுகள், ஆடுகள் சுற்றி திரிவது மட்டுமல்லாமல் பசை வாசனையாலும், பசியாலும் தூண்டப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை உண்டு தனக்கும், தனது சுற்றதார்களுக்கும் கேடு விளைவித்து வருகின்றன.

இவைகளில் இருந்து பெறப்படும் பால்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவதால் அவர்களது உடல்நிலைகளும் பாதிக்கப்படுகிறது. சுவரொட்டிகளை சாப்பிடும் ஆடுகளின் இறைச்சிகளை சாப்பிடுபவர்களும் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், சுவரொட்டிகள் கால்நடைகளுக்கு எமனாக மாறுவதுடன் அதை சார்ந்து இருக்கும் மக்களையும் பாதிக்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கால்நடை மருத்துவமனைக்கு வயிற்றுவலியால் கொண்டு வரப்படும் மாடுகள், ஆடுகளின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்படுவது தொடர் கதையாக நடக்கிறது. கால்நடை வளர்ப்பு விவசாயத்தில் பண மதிப்புமிக்க ஒரு அம்சமாகவே கருதப்பட்டு வருகிறது. இலை, மழை, கொடி என தன் உணவுகளை தேடி அலைந்த கால்நடைகள் இன்று பிளாஸ்டிக்கையும், பேப்பரையும் உண்ணும் அவலநிலைக்கு வந்துவிட்டது. தஞ்சையில் முக்கிய சாலைகளில் மாடுகள் அலைவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News