செய்திகள்
என்ஐஏ

டெல்லியில் பிடிபட்ட 14 பேருக்கும் வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு

Published On 2019-07-21 10:27 GMT   |   Update On 2019-07-21 10:27 GMT
டெல்லியில் பிடிபட்ட 14 பேருக்கும் வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை:

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட அன்சாருல்லா இயக்கத்தை தமிழ்நாட்டில் காலூன்ற வைப்பதற்கு சிலர் மறைமுகமாக முயற்சிப்பதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்டுதல், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி சென்னை, நாகையில் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். தலைவர் சையத் புகாரி வீடு, நாகையை சேர்ந்த அசன்அலி, மஞ்சள் கொல்லையை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபட அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஆதாரங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியது. இதையடுத்து அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தமிழகத்தை சேர்ந்த 14 பேர் டெல்லியில் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டி வருவதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் டெல்லியில் பதுங்கி இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன், அகமது அசாருதீன், த‌ஷபிக் அகமது, முகமது அப்சர், மீரான்கான், முகமது இப்ராகிம் மற்றொரு முகமது இப்ராகிம், ரபி அகமது, முன்தாகீர், பைசல் செரீப், மொய்தீன்சீனி, சாகுல் அமீது, பாரூக், குலாம்நபி ஆசாத் ஆகிய 14 பேரை கைது செய்தனர். இவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் கைதான 14 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது ஒரு லேப்டாப், 7 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 2 பென்டிரைவ், டேட்டா கருவி, 9 சிடி - டிவிடிகள், 50க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்கள் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு சைபர் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

14 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட அன்சாருல்லா அமைப்பை தமிழ்நாட்டிலும், இந்தியா முழுவதும் வலுப்படுத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. அதற்காக அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்புக்காக வெளிநாட்டு பயங்கரவாத கும்பலிடம் இருந்து பண உதவி பெற்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சதிச்செயலில் ஈடுபட திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து 14 பேரையும் கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின்போது கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News