செய்திகள்
குடிநீர் குழாயை கடப்பாரையால் உடைப்பதையும், மண்வெட்டியால் பள்ளம் தோண்டுவதையும் படத்தில் காணலாம்.

திண்டுக்கல் அருகே குடிநீர் குழாயை கடப்பாரையால் உடைத்து பெண்கள் போராட்டம்

Published On 2019-07-21 09:58 GMT   |   Update On 2019-07-21 09:58 GMT
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே ஆத்தூர் காமராஜர் அணை முற்றிலும் வறண்டு போனது. இதனால் திண்டுக்கல் நகர் செம்பட்டி, சின்னாளப்பட்டி, ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அடிக்கடி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. ஆத்தூரிலும் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்தனர். அப்போது அரசு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.

ஆனால் ஆத்தூர், பூஞ்சேலை, முஸ்லிம் காலனி, நந்தனர் காலனி ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராகவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் மீண்டும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

ஆனால் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சித்தையன் கோட்டை சாலையில் இன்று திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான செம்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் வந்தால்தான் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் குடிநீர் குழாயை உடையுங்கள் என ஆவேசமாக கூறியபடி கடப்பாரை கம்பியுடன் வந்தனர். அந்த பகுதி வழியே பூமிக்குள் இருந்த குடிநீர் குழாயை அவர்கள் கம்பியால் தோண்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை டி.எஸ்.பி. பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பெண்கள் சமரசம் ஆகவில்லை. நிலைமை மோசமானதால் அதிவிரைவுப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

எனினும் பெண்கள் குடிநீர் குழாயை உடைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேண்டும் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே ஆத்தூர் அணை வறண்டுவிட்டதால் திண்டுக்கல்லுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறைவான அளவே குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தங்களுக்கே தண்ணீர் இல்லாத நிலையில் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆவேசத்துடன் கூறினர்.

இதனிடையே போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆத்தூர் தாசில்தார் பிரபா விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News