செய்திகள்
கொலை

மாங்காடு அருகே முதியவர் படுகொலை - கொள்ளை

Published On 2019-07-21 06:22 GMT   |   Update On 2019-07-21 06:22 GMT
மாங்காடு அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி:

மாங்காடு அருகே உள்ள மதானந்தபுரம் குறிஞ்சி தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன் (வயது 78). இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் வெளிநாட்டிலும், இளைய மகன் மகேந்திர பிரபு மணிமங்கலத்திலும் வசித்து வருகிறார்கள். சுசீலா கடந்த சில ஆண்டுகளாக மணிமங்கலத்தில் உள்ள மகன் வீட்டில் தங்கி உள்ளார்.

இதனால் பாஸ்கரன் மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார். கடந்த 4 நாட்களாக அவரது வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. அவர் வெளியூர் சென்று இருக்கலாம் என்று அருகில் வசிப்பவர் நினைத்து இருந்தனர்.

இந்த நிலையில் பூட்டிக் கிடந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மாங்காடு போலீசுக்கும், பாஸ்கரனின் மகன் மகேந்திர பிரபுவுக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள அறையில் பாஸ்கரன் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. கழுத்து லுங்கியால் இறுக்கப்பட்டு காணப்பட்டது.

மேலும் உடலின் அருகே ஒரு கத்திரிக்கோலும், செங்கலும் இருந்தன. அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், இரண்டு மோதிரங்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது மொபட்டும் மாயமானது.

மர்ம நபர்கள் பாஸ்கரனை கொலை செய்து நகையை கொள்ளையடித்து விட்டு மொபட்டையும் திருடி தப்பிச்சென்று இருப்பது தெரிந்தது.

கொலையுண்ட பாஸ்கரனும் அதே பகுதியில் உள்ள அடுக்கமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரும் நண்பர்களாக பழகி உள்ளனர்.

அவர் அடிக்கடி பாஸ்கரன் வீட்டுக்கு வந்து தங்கி இருக்கிறார். தற்போது அந்த காவலாளி மாயமாகி விட்டார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவரை பிடிக்க திருவண்ணாமலைக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். அவர் சிக்கினால் தான் பாஸ்கரன் கொலையில் உள்ள மர்மங்கள் விலகும்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் கொலையாளியின் உருவம் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News