செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி நதி மாசு படுவதில் இருந்து மீட்டெடுக்க நடந்தாய் வாழி காவேரி திட்டம்- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-07-20 09:52 GMT   |   Update On 2019-07-20 09:52 GMT
காவேரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, “நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

காவேரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, “நடந்தாய் வாழி காவேரி” என்ற திட்டத்தினை தொடங்க அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதே போன்று பவானி, வைகை, அமராவதி மற்றும் தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க அம்மாவின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இத்தகைய குறுகிய கால மற்றும் நீண்ட கால முயற்சிகளை தமிழ்நாடு நீர் வள ஆதார மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் விரிவாகக் கையாண்டு செயல்படுத்துவதை அம்மாவின் அரசு கண்காணிக்கும்.

இதனால், தமிழ்நாட்டின் நீர் வளம் பாதுகாக்கப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டு, வருங்காலத்தில் தமிழ்நாட்டில் நீர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இந்த நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் பொது மக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும் மற்றும் தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்று, மாநிலத்தின் ஒட்டு மொத்த நலனை பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்களும், இந்த தீவிர இயக்க செயல்பாட்டுக்கு உங்கள் முழு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Tags:    

Similar News