செய்திகள்
என்ஐஏ அதிகாரிகள்

கைதான பெரம்பலூர் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2019-07-20 04:25 GMT   |   Update On 2019-07-20 04:25 GMT
பெரம்பலூர் லெப்பைக்குடிக்காட்டில் உள்ள குலாம்நபி ஆசாத் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இன்று காலை சோதனை நடத்தினர்.
மங்களமேடு:

அன்சருல்லா என்ற புதிய இயக்கத்துக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் தமிழகம் உள்பட பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் இந்த இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் ரகசியமாக செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் அன்சருல்லா இயக்கத்துக்கு துபாயில் நிதி திரட்டுவதற்காக இந்தியாவை சேர்ந்த வாலிபர்கள் தங்கியிருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர் அசாருதீன் தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் துபாயில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

துபாய் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டை சேர்ந்த குலாம்நபி ஆசாத் மற்றும் தேனி, மதுரை, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 வாலிபர்கள் துபாயில் அன்சருல்லா இயக்கத்திற்கு நிதி திரட்ட தங்கியிருப்பது தெரியவந்தது.

அந்த 14 வாலிபர்களையும் துபாய் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை இந்திய தூதரகம் மூலம் விமானத்தில் புதுடெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 14 பேரும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த அன்சருல்லா இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களை திரட்டி வரும் தகவல் தெரிய வந்தது. 14 பேரும் அவர்கள் சொந்த ஊர்களில் இயக்கத்திற்கு ஆதரவாக ஆதரவாளர்களை சேர்த்து வருவதும் தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த இயக்கத்தினருடன் தொடர்புடைய ஆதரவாளர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கவும் மேலும் சில ஆதாரங்களை திரட்டவும் கைது செய்யப்பட்ட 14 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்த தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிக்குழு இன்று 14 பேரின் சொந்த ஊர்களுக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் லெப்பைக்குடிக்காட்டில் உள்ள குலாம்நபி ஆசாத் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழு இன்று காலை சோதனை செய்தது. இந்த சோதனை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் போலீசார் சோதனையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சோதனை முடிவில் மேலும் அன்சருல்லா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

குலாம்நபி ஆசாத்துடன் தொடர்புடைய நண்பர்கள் யார் யார்? அவர்கள் எங்கு தங்கியுள்ளனர்? அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக எங்கு பணியாற்றி வருகிறார்கள். அன்சருல்லா இயக்கத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.

குலாம்நபி ஆசாத் வீட்டில் அவர் பயன்படுத்திய லேப் டாப் மற்றும் செல்போன், சிம்கார்டுகள், பயன்படுத்தாத சிம்கார்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவரது நண்பர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். குலாம் நபி ஆசாத் லெப்பைக்குடிக்காட்டில் எப்போது முதல் குடியிருந்து வருகிறார். இதற்கு முன்பு எங்கு குடியிருந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.


Tags:    

Similar News