செய்திகள்
கைது செய்யப்பட்ட சுரேஷ்

மனைவி, கொழுந்தியாளிடம் சிரித்து பேசியதால் நண்பரை அடித்துக்கொன்றேன்- கட்டிடதொழிலாளி வாக்குமூலம்

Published On 2019-07-19 11:40 GMT   |   Update On 2019-07-19 11:40 GMT
திருப்பூரில் மனைவி, கொழுந்தியாளிடம் சிரித்து பேசியதால் கார்பெண்டரை அடித்துக்கொன்றேன் என்று கட்டிடதொழிலாளி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர்:

தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (வயது 29). இவர் திருப்பூர் காங்கயம் ரோடு விஜயாபுரத்தில் தங்கி வீடுகளுக்கு ஜன்னல், கதவு செய்யும் கார்பெண்டர் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுலகண்ணன் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தார். நண்பர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுலகண்ணன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கோகுலகண்ணன் கொலையான நாள் முதல் அவரது நண்பர் சுரேஷ் (30) என்பவர் மாயமானார். அவர் தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று போலீசார் சுரேசை தேடி வந்தனர். இந்நிலையில் சுரேஷ் நேற்று பிடிபட்டார். போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்கிப் பிடி விசாரணையில் கோகுலகண்ணனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும் சுரேஷ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன். அப்போது கோகுலகண்ணன் வீடுகளுக்கு ஜன்னல், கதவுகள் பொருத்தும் வேலை செய்து வந்தார். எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து அடிக்கடி மதுகுடித்து வந்தோம். எங்களின் நட்பு நெருக்கமானதால் எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார்.

அப்போது எனது மனைவி மற்றும் கொழுந்தியாளிடம் சிரித்து சிரித்து பேசினார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து மனைவியிடம் கேட்டபோது அவர் கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.

சம்பவத்தன்று நான், கோகுலகண்ணன் மற்றும் மற்றொரு நண்பர் மணிகண்டன் ஆகியோர் மதுகுடித்தோம். பின்னர் மணிகண்டன் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நானும், கோகுலகண்ணனும் எனது வீட்டுக்கு வந்தோம்.

அப்போது எனது மனைவி, கொழுந்தியாளிடம் சிரித்து சிரித்து பேசியது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் கோகுல கண்ணன் தாக்கினேன். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை மற்றவர்களுடன் சேர்ந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு தப்பினேன். 

இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News