செய்திகள்
கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள்

பலத்த சூறைக்காற்று எதிரொலி - நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2019-07-19 07:42 GMT   |   Update On 2019-07-19 07:42 GMT
நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்று காரணமாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
நெல்லை:

கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்கள் உள்பகுதி நோக்கியும், மேற்கு, வடமேற்கு திசையில் பலத்த காற்றும் வீசி வருகிறது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி இருப்பதால் தூத்துக்குடி கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்பட்டது. தூத்துக்குடி கடல் பகுதியில் நேற்று சுமார் 30 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மீன்பிடி படகுகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலில் பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் (நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு) மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து உத்தரவிட்டனர். தூத்துக்குடியில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்குகடல் மீன்பிடித்தலுக்கு சென்ற மீனவர்களுக்கும் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் தொடர்ந்து அதிவேகத்தில் காற்று வீசி வருகிறது. இதையடுத்து இன்று 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்று காரணமாக கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூந்தன்குழி, ஆரோக்கியபுரம், பஞ்சல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 7 ஆயிரம் படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News