செய்திகள்
மாதிரி படம்

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியது - 4 மீனவர்கள் தவிப்பு

Published On 2019-07-19 04:34 GMT   |   Update On 2019-07-19 04:34 GMT
தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்களை மீட்க காவல் படையினர் புறப்பட்டுச்சென்றனர்.

ராமேசுவரம்:

நடுக்கடலில் படகு மூழ்கியது. அதில் இருந்த 4 மீனவர்கள் அருகில் உள்ள தீடையில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை மீட்கும் பணியில் மீனவர்களும், கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு புறப்பட்டனர். பாம்பனை சேர்ந்த முத்து என்பவருக்கு சொந்தமான நாட்டு படகில் அதே பகுதியைச் சேர்ந்த கார்வின், பாக்கியம், லெனிஸ்டன் உள்பட 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் நேற்று இரவு தனுஷ்கோடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதால் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக படகு தள்ளாடியது. தொடர்ந்து படகுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

தொடர்ந்து தண்ணீர் புகுந்ததால் படகு மூழ்கத் தொடங்கியது. இதையடுத்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள 4 மீனவர்களும் கடலில் குதித்தனர். அவர்கள் நீந்தி சென்று அருகில் உள்ள 4-வது தீடையில் தஞ்சம் அடைந்தனர்.

இரவு நேரம் என்பதால் அந்த பகுதிக்கு யாரும் வரவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தவிப்புக்குள்ளாகினர். இதனிடையே படகு மூழ்கிய விவரம் உரிமையாளர் முத்துவுக்கு தெரியவந்தது. உடனே அவர் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து பாம்பன் பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் 4 மீனவர்களையும் மீட்க இன்று காலை கடலுக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் பாம்பன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News