செய்திகள்
நெல்லை கோட்டாட்சியர் அலுவலகம்

நெல்லை கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி - கோர்ட்டு ஊழியர்கள் அதிரடி நடவடிக்கை

Published On 2019-07-17 12:28 GMT   |   Update On 2019-07-17 12:28 GMT
கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து சென்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்குவதற்காக கடந்த 1984-ம் ஆண்டு 15 ஏக்கர் இடம் தனியாரிடம் இருந்து கையகப்படுத்தினர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் நில உரிமையாளர்களான நாகர்கோவில் பயோனியர் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ரூ.20 கோடி வழங்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து 2005, 2012 வருடங்களில் ரூ.6 கோடி மட்டுமே வழங்கியது. மீதமுள்ள ரூ.14 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. எனவே ரூ.14 கோடியை வழங்க கோரி கம்பெனி நிர்வாகத்தின் 6 வாரிசு தாரர்கள் நெல்லை சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதனை தொடர்ந்து சப்-கோர்ட்டு கடந்த மே மாதம் அசையா சொத்துக்களான மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு அமினாக்கள் நெல்லை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.

அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்வதாக கூறி மேல்முறையீடு செய்தனர். அதன் பின்னரும் பணம் கொடுக்காததால் கடந்த வாரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மின்சாதனங்களை ஜப்தி செய்ய சப்-கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு அமினாக்கள் நெல்லை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் வந்தனர்.

அவர்கள் அங்கிருந்த ஏ.சி., கம்ப்யூட்டர், பேன், மரச் சாமான்கள் உள்ளிட்ட மின்சாதனங்களை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது கோட்டாட்சித் தலைவரோ, அவரது நேர்முக உதவியாளரோ அங்கு இல்லை. ஒரு சில ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்கள் அமினாக்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஜப்தி செய்வதில் அமினாக்கள் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் அமினாக்கள் ஜப்தி உத்தரவை காண்பித்து அங்கிருந்த ஏ.சி., பேன், கம்ப்யூட்டர் போன்றவற்றை ஜப்தி செய்து எடுத்து சென்றனர். இதுவரை உயர் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

கோட்டாட்சியர் அலுவலக பொருட்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து சென்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News