செய்திகள்
குழந்தையை கடத்தலில் கைதான கோபிரெட்டி

சென்ட்ரலில் இருந்து தூக்கிச்சென்ற 3 வயது குழந்தையை, போலீசுக்கு பயந்து விட்டு சென்ற கடத்தல்காரன்

Published On 2019-07-17 07:47 GMT   |   Update On 2019-07-17 07:47 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 3 வயது குழந்தையை தூக்கிச் சென்ற கடத்தல்காரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடந்த 14-ந்தேதி இரவு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராம்சிங் - நீலாவதி படுத்து தூங்கினார்கள்.

அவர்களது 3 வயது குழந்தையான சோம்நாத்தும் அருகில் படுத்து உறங்கியது. நள்ளிரவில் நீலாவதி திடீரென கண்விழித்து பார்த்தார். அப்போது சோம்நாத்தை காணாமல் திடுக்கிட்ட அவர், கணவர் ராம்சிங்கை எழுப்பினர். 2 பேரும் சேர்ந்து ரெயில் நிலையம் முழுவதும் குழந்தை சோம்நாத்தை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் கண்ணீர் வடித்த இருவரும் இதுபற்றி ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர்.

சென்ட்ரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் குழந்தை சோம்நாத்தை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ காட்சிகளை போலீசார் வெளியிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். சென்ட்ரலில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையுடன் அந்த நபர் மின்சார ரெயிலில் ஏறிச்சென்றாரா? என்பது பற்றி கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தாம்பரம் ரெயில் நிலையத்தில் குழந்தையுடன் கடத்தல் ஆசாமி இறங்கி செல்லும் வீடியோவும் பதிவாகி இருந்தது. இந்த போட்டோக்களும் நேற்று காலையில் வெளியானது.

இந்த நிலையில் கடத்தல் ஆசாமி குழந்தை சோம்நாத்தை திருப்போரூரில் தனியாக விட்டுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. அங்குள்ள பஸ் பணிமனை அருகே குழந்தை சோம்நாத்தை மீட்ட பொதுமக்கள் இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தை சோம்நாத் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தையை கடத்திச் சென்ற ஆசாமி மீண்டும் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கே வந்தான். அப்போது போலீசிடம் வசமாக சிக்கிக் கொண்டான்.

அவனது பெயர் கோபி ரெட்டி. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவன் கிண்டியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளான். ஒடிசாவில் குடும்பத்தினர் உள்ளனர். கோபிரெட்டிக்கு 4 குழந்தைகள் உள்ளது.

சோம்நாத்தை கடத்தியது ஏன்? என்பது பற்றி கோபி ரெட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக அவன் அளித்த வாக்குமூலத்தில் ராம்சிங்-லீலாவதியிடம் சென்று புகையிலை கேட்டதாகவும், அதனை தர மறுத்ததால் ஆத்திரத்தில் அவர்களது குழந்தையை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான். இருப்பினும் கோபிரெட்டி சொல்வது உண்மைதானா? என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவனது பின்னணி என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News