செய்திகள்
போராட்டம்

அரூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Published On 2019-07-17 06:04 GMT   |   Update On 2019-07-17 06:04 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே குடிநீர் கேட்டு 40-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மோபிரிப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எட்டிப்பட்டி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் தண்ணீரை மேல்நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைத்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தற்போது புழுக்கள் நிறைந்து சுகாதாரமற்று கிடக்கிறது. இதனால் மேல்நீர்தேக்க தொட்டி குடிநீரை பயன்படுத்தா முடியாமல் உள்ளது. மேலும், ஒகேனக்கல் கூட்டு குடிநீரும் தற்போது சரிவர விநியோகிக்கவில்லை என்பது தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பெண்கள் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம் பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தப்படுத்தி தரவேண்டும் என்றும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சீராக விநியோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தொட்டியை சுத்தம் செய்யவும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததின் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News