செய்திகள்
அம்பரப்பர் மலைக்கு செல்ல முயன்ற பி.ஆர்.பாண்டியனை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.

அம்பரப்பர் மலைக்கு செல்ல முயன்ற பி.ஆர்.பாண்டியன் தடுத்து நிறுத்தம்

Published On 2019-07-17 05:07 GMT   |   Update On 2019-07-17 05:07 GMT
நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள தேனி அம்பரப்பர் மலைக்கு செல்ல முயன்ற விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:

மத்திய அரசு சுமார் ரூ.1,500கோடி மதிப்பீட்டில் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டது. அதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்பு காரணமாக பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம், மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங், “நியூட்ரினோ திட்டம் அமைக்க மத்திய அணுசக்தித் துறை அனுமதியளித்திருக்கிறது” என அறிக்கை தாக்கல் செய்தார். இதனால், மீண்டும் நியூட்ரினோ குறித்த அச்சம் பொட்டிபுரம் மக்களிடம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொட்டிபுரம் அம்பரப்பர் மலைக்குச் செல்ல முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று வழியில் புதுக்கோட்டை கிராமம் முத்தாளம்மன் கோவில் அருகே அவரை தடுத்து நிறுத்தினர். அம்பரப்பர் மலைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுத்தனர்.

இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இங்கு போராட வரவில்லை. மக்களை சந்தித்து பேசவும், அம்பரப்பர் மலையை பார்க்கவும் தான் வந்தேன். ஆனால், நான் காலையில் புறப்படும் போது, ‘நீங்கள் பொட்டிபுரம் வரக்கூடாது. தேவாரம் வட்டாரத்தில் எங்குமே பேட்டி அளிக்கக்கூடாது என போலீசார் போனில் மிரட்டல் விடுக்கிறார்கள்.

நான் என்ன பயங்கரவாதியா? நியூட்ரினோ என்கிற திட்டத்தால் பொட்டிபுரம், புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்தைப் போக்க, நியூட்ரினோ திட்டம் குறித்து தமிழக அரசு சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும். இது துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதி. அவர் நியூட்ரினோ திட்டம் குறித்து சட்டசபையில் தெளிவுபடுத்த வேண்டும்.

நியூட்ரினோ திட்டத்தை பேரழிவுத் திட்டம் என்கிறோம். இதனால் விவசாயம் முற்றிலும் அழிந்துபோகும். இது குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News