செய்திகள்
பண மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி - 2-வது முறையாக சிறைக்கு சென்ற கோவை தம்பதி

Published On 2019-07-16 14:49 GMT   |   Update On 2019-07-16 14:49 GMT
கோவை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து தம்பதியை போலீசார் 2-வது முறையாக சிறையில் அடைத்தனர்.
கோவை:

கோவை இடையர்பாளையம் அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 24). டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டார்.

இதற்காக கடந்த ஆண்டு சிவானந்தாபுரத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கும் நிறுவனத்தை அணுகினார். நிறுவனத்தின் உரிமையாளர் கணபதி மாநகரை சேர்ந்த சந்தோஷ் (38), அவரது மனைவி வசந்தி (36) ஆகியோர் தாங்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி உள்ளோம். உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலை ஆஸ்திரேலியாவில் உள்ளது. வேலைக்கு ரூ. 6 லட்சம் செலவாகும் என ஆசை வார்த்தை கூறினர். இதனை உண்மை என நம்பிய சந்தோஷ் ரூ. 6 லட்சம் பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட தம்பதி சந்தோசிடம் நீங்கள் முதலில் இந்தோனேசியா சென்று அங்கு இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் என கூறினர். பின்னர் அவர் சுற்றுலா விசாவில் இந்தோனேசியாவுக்கு சென்றார். அப்போது சந்தோசை தொடர்பு கொண்ட தம்பதி அங்கு இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டுமானால் கூடுதலாக ரூ. 3 லட்சம் பணம் வேண்டும் என்றனர். அந்த பணத்தை சந்தோஷின் தந்தை சுப்பிரமணியம் தம்பதியிடம் கொடுத்தார். அதன் பின்னரும் சந்தோசை அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த சந்தோஷ் மீண்டும் கோவைக்கு திரும்பினார். பின்னர் இது குறித்து மாநகர குற்றப்பிரிபு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகராஜன் மோசடி தம்பதியை கைது செய்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் இதே போல 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு இதே போல மோசடி செய்து சிறைக்கு சென்று வெளியே வந்ததும் தெரிய வந்தது.போலீசார் தம்பதி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News