செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்

குறைந்த விலைக்கு கடத்தல் தங்கம் கொடுத்ததாக கூறி ஆந்திரா தொழில் அதிபர் நெல்லைக்கு கடத்தல்

Published On 2019-07-16 11:56 GMT   |   Update On 2019-07-16 11:56 GMT
குறைந்த விலைக்கு கடத்தல் தங்கத்தை கொடுத்ததாக கூறி ஆந்திரா தொழில் அதிபரை நெல்லைக்கு கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
நெல்லை:

ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் ரெட்டி, தொழிலதிபர். இவருடைய மகன் ராமன் ரெட்டி (வயது28). இவர் பல்வேறு தொழில் நிறுவனங்களை கவனித்து வருகிறார். இவரிடம் தமிழகத்தை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டு தங்களிடம் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்த தங்கம் குறைந்த விலைக்கு கிடைப்பதாக கூறினர்.

இது சம்பந்தமாக ராமன் ரெட்டி விசாரித்த போது, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிக்கு வருமாறு அழைத்தனர். இதனை நம்பி அவர்களும் நேற்று முன்தினம் நெல்லைக்கு வந்தார். இதையடுத்து ஆட்கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் வசந்தகுமார் (27), செந்தட்டி கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் (31) மற்றும் 6 பேர் காருடன் தயாராக இருந்தனர்.

இதையடுத்து ராமன் ரெட்டியை அழைத்து கொண்டு காரில் கிளம்பினர். அப்போது அவரிடம் தங்கம் வாங்குவதற்கு பணம் எவ்வளவு உள்ளது என கேட்டுள்ளனர். அதற்கு அவர் 23 ஆயிரம் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். உடனே அந்த கும்பல் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு கை, கால்களை கட்டி போட்டு 30 லட்சம் பணம் தர வேண்டும் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் ராமன்ரெட்டி வைத்திருந்த டெபிட் கார்டில் இருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். 5 பவுன் மதிப்புள்ள செயின், மோதிரத்தையும் பறித்து கொண்டனர். பின்னர் அந்த கும்பல் நெல்லை மாவட்டம் முழுவதும் காரிலேயே சுற்றி வந்தனர். நேற்று மாலை சேர்ந்தமரம் பகுதியில் காரை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றனர்.

அப்போது காரில் ராமன் ரெட்டி மட்டும் தனியாக இருந்தார். கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்டிருந்த நிலையில் அவர் காரை உலுக்கினார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோட முயன்றது.

ஆனால் போலீசார் விரட்டி சென்று 2 பேரை மடக்கி பிடித்தனர். அதன்பின் காரில் கை, கால், வாய் கட்டப்பட்டிருந்த ராமன்ரெட்டியை மீட்டனர். இது சம்பந்தமாக சேர்ந்தமரம் போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர். மேற்கண்ட தகவல்கள் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட ராமன் ரெட்டியிடம் விசாரித்ததில் தெரியவந்தது.
Tags:    

Similar News