செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

சுரண்டை அருகே கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2019-07-15 05:01 GMT   |   Update On 2019-07-15 05:01 GMT
சுரண்டை அருகே கட்டிட தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுரண்டை:

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வரகுணராமபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் என்ற மணி (வயது27), சரவணன் (32), அரவிந்தன் (27) இவர்கள் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள காமராஜர் ரத்ததான கழகத்தில் சேர்ந்து இருந்தனர்.

இன்று காமராஜர் பிறந் நாள் என்பதால் அவர்கள் விழா கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக டிஜிட்டல் பேனர்கள் தயார் செய்து வைத்து இருந்தனர். இன்று காலை முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர்களை கட்டி வந்தனர்.

மணி, சரவணன், அரவிந்தன் ஆகிய 3 பேரும் வரகுணராமபுரத்தில் உள்ள கோவில் வளாகம் அருகே 40 அடி உயர கம்பு கட்டி அதில் பிரம்மாண்டமான காமராஜர் பட டிஜிட்டல் பேனரை கட்டி வந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக டிஜிட்டல் பேனர், அருகில் உள்ள மின் கம்பியில் சரிந்தது. டிஜிட்டல் பேனர் ஓரங்களில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருந்ததால் அதை பிடித்து கொண்டு இருந்த மணி, சரவணன், அரவிந்தன் ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் உடல் கருகி உயிருக்கு போராடினார்கள்.

உடனடியாக அந்த பகுதியில் நின்றவர்கள் 3 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மணி, சரவணன் ஆகிய 2 பேரும் பலியானார்கள். அரவிந்தனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவத்தை கேள்விப்பட்ட பலியானவர்களின் உறவினர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்து கதறி அழுதனர். பலியான சரவணனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சப்- இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News