செய்திகள்
தலை எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணம்.

திருச்சிற்றம்பலம் அருகே தலை எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணத்தால் பரபரப்பு

Published On 2019-07-13 13:19 GMT   |   Update On 2019-07-13 13:19 GMT
திருச்சிற்றம்பலம் அருகே 50 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் தலை எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சிற்றம்பலம்:

தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் இருந்து பேராவூரணிக்கு செல்லும் சாலையையொட்டி ஏழுமுக காளியம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில் சாலையோரத்தில் 50 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் தலை எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது இன்று காலை தெரியவந்தது.

பேராவூரணி ஆத்தாளூர் வீரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு அந்த வழியாக வந்தவர்கள் இன்று அதிகாலை பிணத்தை பார்த்துவிட்டு திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டனர்.

கொலையுண்டவர் ஊதா நிறத்தில் டவுசர் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த வெள்ளை நிறத்திலான டி-சர்ட் மற்றும் கருப்பு சிவப்பு நிறத்தில் கோடு போட்ட ஒரு போர்வை மற்றும் சிறு குழந்தையின் பேண்ட், பட்டுக்கோட்டை முகவரியில் உள்ள ஒரு ஜவுளி கடையின் முகவரி உள்ள ஒரு கம்பு பிடி போட்ட துணிப்பை ஆகியவை பக்கத்தில் உள்ள கரும்பு கொல்லையில் ரத்தக்கறையுடன் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். மேலும் இறந்து கிடந்தவரை கொலை செய்தவர்கள் தலையில் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அந்த நபர் இறந்து உள்ளார். அவரது உடலை மோட்டார் சைக்கிளிலோ அல்லது நான்கு சக்கர வாகனத்திலோ கொண்டு வந்து போட்டு விட்டு அவரது தலையை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இறந்து கிடந்த நபரின் முகம் முழுவதுமாக கருகி விட்டதால், அவர் யார்? என்பது தெரியவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் கைரேகைகளை பதிவு செய்தார். தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய் ராஜராஜன் சம்பவ இடத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் அண்ணா நகர் வரை ஓடியது. பின்னர் அங்கேயே நின்றுவிட்டது. எனவே அதுவரை சென்ற குற்றவாளிகள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கினறனர். இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ள தொடர்புகள் அம்பலமானதால் இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து சம்மந்தமான தகராறில் இந்த கொலை நடந்ததா? என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News