செய்திகள்
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள அம்பரப்பர் மலை.

நியூட்ரினோ மையத்துக்கு ஒப்புதல் போராட்டத்தில் இறங்கபோவதாக விவசாயிகள் ஆவேசம்

Published On 2019-07-12 04:55 GMT   |   Update On 2019-07-12 04:55 GMT
தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் சர்வதேச தரம் வாய்ந்த நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அறிவியல் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை எட்டிவிட முடியும் என இந்திய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும் இந்த ஆய்வு மையம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மத்தியில் பரவி வரும் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நியூட்ரினோ துகள் எளிதில் அடையாளம் காணமுடியாத அணுவை விட சிறிய துகள். உலகம் முழுவதும் பரவியுள்ள நியூட்ரினோ துகள்கள் குறித்த விவரங்களை அறிவது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. காஸ்மிக் கதிருடன் பயணிக்கும் நியூட்ரினோ துகள்களை பிரித்து ஆராய்ச்சி செய்ய கடினமான ஒற்றைப் பாறை தேவை.

தேனி மாவட்டம் அம்பரப்பர் கல்பாறைதான், விஞ்ஞானிகள் எதிர்பார்த்த அந்த பாறை. இந்த பாறையினை சுமார் 1,500 மீட்டர் குடைந்து, அதில் மிகப்பெரிய மின்காந்தத்தைப் பொருத்தி அதன் மூலம் நியூட்ரினோ துகள்களை ஈர்த்து ஆய்வுகள் செய்யப்படவுள்ளன. 1,300 கோடி ரூபாய் மதிப்பில் செயல் படுத்தவுள்ள இந்த ஆய்வுக் கூடத்தின் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கின.

மலையைச் சுற்றி சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்தன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதன் பின் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் மத்திய சுற்றுச்சூழல் மையத்தில் அனுமதி கோரப்பட்டது. நியூட்ரினோ மையம் அமைக்க அனுமதி வழங்கி மத்திய சுற்றுச்சூழல் மையம் அனுமதி அளித்தது.

இருந்தபோதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த கோரி தேனி மாவட்டம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.

இதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது 2-வது முறையாக மத்தியில் பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு நியூட்ரினோ திட்டம் குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதம் நடத்தியது. இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியதோடு அணுசக்தி துறை விஞ்ஞானிகளும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதால் தேனி மாவட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் இங்கு செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் பாலைவனமாகி விடும். நில நடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் சம்பவங்களும் நடைபெறும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் மக்களை அழைத்து பேசி இத்திட்டம் செயல்படும் விதம் குறித்தும், இதனால் பாதிப்புகள் இல்லை என்பது குறித்தும் விளக்கி கூறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கனவே ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு போன்ற திட்டங்களை எதிர்த்து பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது நியூட்ரினோ திட்டத்துக்காகவும் போராட்டத்தில் குதிக்கும் நேரம் வந்து விட்டது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய காரணம் குறித்து விஞ்ஞானி ஸ்டீபன் ராஜ்குமார் கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டம் எதிர்காலத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளுக்கு அடித்தளமான ஆக்கப்பூர்வமான திட்டம். நியூட்ரினோ துகள்கள் சூரியனில் இருந்து நமக்கு நேரடியாக கிடைக்கிறது. பூமியின் மேலே இருந்து வரக்கூடிய காஸ்மிக் கதிர்கள் சுற்றுச்சூழலோடு வினைபுரியும் போது நியூட்ரினோ துகள்கள் உற்பத்தியாகிறது.

நமது உடலில் உள்ள பொட்டாசியமும் நியூட்ரினோ துகளை உருவாக்குகிறது. உலகத்துக்கு வெளிச்சம் தரும் ஒளித் துகள்களுக்கு அடுத்து அதிகமாக பரவி கிடப்பது நியூட்ரினோ துகள்கள். எதனுடனும் எளிதாக வினை புரியாது. ஒவ்வொரு வினாடியும் பல ஆயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவி செல்கின்றன.இந்த நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்குதான் பொட்டிபுரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்ய மற்ற கதிர்களை மறைத்து நியூட்ரினோ மட்டும் அனுப்பக்கூடிய வடிகட்டி தேவை. இந்த வடிகட்டும் தன்மை இயற்கையாகவே கடினமான பாறைகளுக்கு உண்டு.

இந்த பாறைக்கு அடியில் உணர் கருவியை வைத்து நியூட்ரினோ துகள்களை வடிகட்டலாம். இதற்கு சரியான இடம் இந்தியாவில் இமயமலையும் அதற்கு அடுத்தாற்போல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொட்டிபுரம் உள்ளது.

எனவேதான் இங்கு ஆய்வு மையம் அமைய உள்ளது. இந்த மலையில் ஆய்வு மையம் அமைக்க ஏற்ற வகையில் அதன் பரப்பு எல்லா திசையிலும் 1 கி.மீ இருக்கிறது. எனவே நியூட்ரினோ துகளை வடிகட்டி அனுப்ப சரியான இடம் என பொட்டிபுரத்தை தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

Tags:    

Similar News