சிங்கை அருகே குடும்ப தகராறில் 7 வயது சிறுமியை அடித்துக் கொலை செய்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கை ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ்(வயது 37). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீலாவதி. இவர்களது முதல் மகள் ஐஸ்வர்யா(13) ஆழ்வார்குறிச்சியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இரண்டாவது மகள் சுகிர்தா(7) சிங்கையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்தது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கைலாஷ் மனைவி மற்றும் மகளை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சுகிர்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி கொலையை மறைக்க முடிவு செய்தனர். பின்னர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடி அப்பகுதியினரை நம்ப வைத்தனர்.
மேலும் இறுதிச் சடங்கு செய்வதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் சிங்கை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் தந்தை-தாய் இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமியை அடித்து கொலை செய்துவிட்டு தந்தை-தாய் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.