செய்திகள்
சேகர்பாபு எம்எல்ஏ

தெரு ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு வீடு வழங்குவது எப்போது?- சேகர்பாபு எம்எல்ஏ கேள்வி

Published On 2019-07-09 09:02 GMT   |   Update On 2019-07-09 09:03 GMT
தமிழக சட்டசபையில் இன்று சாலை ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு எப்போது வீடுகள் ஒதுக்கப்படும் என்று சேகர்பாபு எம்எல்ஏ கேள்வியெழுப்பினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று சாலை ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு வீடு வழங்குவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறேன். வீடுகள் ஒதுக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை வீடுகள் வழங்கப்படவில்லை.

சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்கள் காலைக்கடன்களை முடிக்கக் கூட இடம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். பெண்கள் நிலையை கருத்தில் கொண்டாவது அவர்களுக்கு வீடு ஒதுக்கித் தர வேண்டும்

இதற்கு பதில் அளித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தொலைநோக்கு திட்டம் 2023-ஐ ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 15 லட்சம் ஏழைகளுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவில் 2023-க்குள் வீடு வழங்க திட்டமிடப்பட்டு படிப்படியாக அந்த பணிகள் நடந்து வருகின்றன.

சேகர்பாபு, சாலை ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு வீடு இல்லை என்று குறிப்பிட்டார். அவர்களுடைய குடியிருப்பு சான்றிதழை உறுதி செய்து கொடுத்தால் படிப்படியாக வீடு கட்டித்தரப்படும். இதே போல் எழும்பூர் பகுதியிலும் ஏழை மக்களுக்கு வீடுகட்டித் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News