செய்திகள்
கபினி அணை

தென்மேற்கு பருவமழை தீவிரம் - கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-07-06 05:47 GMT   |   Update On 2019-07-06 05:47 GMT
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தர்மபுரி:

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடந்த 2-ந் தேதி கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்)அணைக்கு வினாடிக்கு 669 கனஅடி நீர்வரத்து வந்தது.

நேற்று அணைக்கு 1,441 கனஅடியாக அதிகரித்து வந்த நீர்வரத்து இன்று காலை 2,222 கனஅடியாக மேலும் அதிகரித்தது.

கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் 124.80 அடி கொள்ளளவு உள்ள இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 80.75 அடியாக உயர்ந்து வருகிறது.

இதேபோல கபினி அணைக்கு வினாடிக்கு நேற்று 2,169 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து வினாடிக்கு 4,261 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது.

இதனால் 84.14 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் இன்று 59.25 அடியாக உள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி போன்ற அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணைகள் நிரம்பிய பிறகு ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News