செய்திகள்
முக ஸ்டாலின்

ஏழை-எளிய மக்களுக்கு கசப்பு, பெரு நிறுவனங்களுக்கு இனிப்பு: பட்ஜெட் குறித்து ஸ்டாலின் கருத்து

Published On 2019-07-06 03:05 GMT   |   Update On 2019-07-06 03:20 GMT
மத்திய பட்ஜெட் ஏழை-எளிய மக்களுக்கு கசப்பை யும், பெரு நிறுவனங்களுக்கு இனிப்பையும் வழங்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் வழக்கம்போல் அலங்கார வார்த்தைகளும், அறிவிப்புகளும் நிறைந்த அணிவகுப்பாக காட்சியளிக்கிறதே தவிர கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் வகையில் மாநிலங்களின் உணர்வுகளும், எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்படவில்லை. இது காதுக்கு விருந்தே தவிர, கருத்துக்கு விருந்தில்லை.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வைத்துள்ள 51 சதவீத பங்கையும்கூட குறைத்துக்கொள்ளலாம் என்று கொள்கை முடிவை அறிவித்து நீண்டகாலமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் முழுவதுமாக மூடுவிழா நடத்திவிடுவார்கள் போல் இருக்கிறது.



கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்த ரூ.1,000 கோடி நிதியைக்கூட ஒதுக்கவில்லை. தனிநபரின் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாத பா.ஜ.க. அரசு தங்களுக்காக தேர்தலில் பாடுபட்டு வெற்றிக்கு வழி அமைத்து கொடுத்த பெரு நிறுவனங்களுக்கு கரிசனத்துடன் ரூ.250 கோடி ‘டர்ன்ஓவர்’ உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையை ரூ.400 கோடி வரை நீட்டித்து, 99 சதவீத கார்ப்பரேட் கம்பெனிகள் வரிச்சலுகை பெறும் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. அதுவும் போதாது என்று வருமான வரியில் இருந்தும் கார்ப்பரேட்டுகளுக்கு 5 சதவீத கூடுதல் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பத்திரிகைகள் அச்சடிக்க தேவையான ‘நியூஸ் பிரின்ட்’ இறக்குமதிக்கு புதிதாக 10 சதவீதம் ‘கஸ்டம்ஸ் டூட்டி’ விதித்திருப்பது ‘பிரின்ட் மீடியாக்களை’ அடியோடு முடக்கி, செய்தி பரவலையும், கருத்து சுதந்திரத்தையும் தகர்த்திடும் தந்திரமாக இருக்கிறது. பத்திரிக்கை துறையை நசுக்கும் வகையில் இப்படியொரு வரிச்சுமையை ஏற்றி இருப்பது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றை பலவீனப்படுத்துவதாக இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை ஏழை-எளிய, நடுத்தர மக்களை கணக்கில் கொள்ளவில்லை, கசப்பைத் தந்திருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரண சாமானியர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நிதிநிலை அறிக்கை எட்டாத தூரத்தில் நட்டுவைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News