செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டை

மெட்ரோ ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும் வசதி- விரைவில் அமல்படுத்த திட்டம்

Published On 2019-07-05 10:09 GMT   |   Update On 2019-07-05 10:09 GMT
மெட்ரோ ரெயில் ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் ஓட்டல், சில்லரை கடைகளில் பொருட்களை வாங்கும் வசதி விரைவில் அமல்படுத்தப்படுகிறது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

பயணிகள் பொது மக்கள் வரவேற்பை தொடர்ந்து 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரிக்கு விரைவில் வழித்தட பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக மெட்ரோரெயில் நிர்வாகம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மெட்ரோ ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் வாகன ‘பார்க்கிங்’ கட்டணம் செலுத்தும் வசதியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்தார்.

மெட்ரோ ரெயில்நிலைய ‘ஸ்மார்ட் கார்டு’ மூலம் பயணிகள் எளிதில் பயன் அடையும் விதம் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகன பார்க்கிங் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயன் பெறுவார்கள்.

கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், வடபழனி, ஆலந்தூர், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, ஐகோர்ட்டு, அரசினர் தோட்டம், எல்.ஐ.சி. ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் வாகன கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஸ்மார்ட்டு மூலம் வாகன கட்டணம் செலுத்தும் வசதி விரிவுபடுத்தப்படும்.

மேலும் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு மூலம் ஓட்டல், மால்கள், சில்லரை கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

மெட்ரோ ஸ்மார்ட் கார்டு இருப்பு தொகையின் மூலம் மெட்ரோ பயணிகள் எளிதில் கடைகளில் ஷாப்பிங் செய்யும் வசதி தொடங்கப்படும்.

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வழித்தட பாதை நீட்டிப்பு விரைவாக நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகருக்கு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தொடங்கப்படும். இதன் மூலம் முதல் கட்டமாக 52 கிலோ மீட்டர் தூர வழித்தடப்பாதையில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை இலக்கு நிறைவு பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News