செய்திகள்
தமிழக சட்டசபை

சட்டசபையில் அமளி: ஓபிஎஸ் கருத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு

Published On 2019-07-04 10:30 GMT   |   Update On 2019-07-04 10:30 GMT
தமிழக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கருத்துக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது புதுக்கோட்டையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. அதை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்ட வேண்டும் என்று பெரியண்ணன் அரசு (தி.மு.க.) கோரிக்கை வைத்தார். அப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அரசை குறை கூறும் மன நிலையிலேயே உறுப்பினர் பேசுகிறார் என்று குறிப்பிட்டார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுபோல அ.தி.மு.க. உறுப்பினர் குமரகுரு பேசும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதலில் அனுமதி கொடுத்தது யார்? என்பது குறித்து நேற்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதை குறிப்பிட்டார்.

இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தி.மு.க. கொறடா சக்கரபாணி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளப்படும் என்றார். அதன் பின்னர் தி.மு.க. உறுப்பினர்கள் அமைதி ஆனார்கள்.

Tags:    

Similar News