செய்திகள்
மாதிரி படம்

சென்னை உள்பட 42 மையங்களில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

Published On 2019-07-03 06:58 GMT   |   Update On 2019-07-03 06:58 GMT
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுய நிதி பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது.

விண்ணப்பித்ததில் தகுதியான ஒரு லட்சத்து ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள்.

வீட்டில் இருந்தபடியேகூட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த உதவி மையம் செயல்படுகிறது. ரேங்க் பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் கலந்தாய்வு வருகிற 28-ந்தேதி வரை நடை பெறுகிறது. 4 கட்டங்களாக நடக்கும் கலந்தாய்வை தமிழ்நாடு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. ஒவ்வொரு மையத்திலும் அதன் பணியாளர்கள் மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

முதல் நாளில் கல்லூரிகளில் சேருவதற்கான தொடக்க முன்பணம் செலுத்தப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு பிரிவினருக்கு ரூ.1000 வீதம் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தப்படுகிறது.

இன்று முதல் 7-ந்தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். 8 மற்றும் 9-ந்தேதி கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

10-ந்தேதி மாலைக்குள் கல்லூரியை தேர்வு செய்து லாக் அவுட் பண்ண வேண்டும். 11 மற்றும் 12-ந் தேதி தற்காலிகமாக கல்லூரி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

12-ந்தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளை தேர்வு செய்து உறுதிபடுத்த வேண்டும். அதன் பின்னர் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியாது. கல்லூரிகளை உறுதிபடுத்தினால் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் என்பதால் அந்த நிகழ்வு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

13-ந்தேதி காலையில் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேருவதற்கான ஒதுக்கீடு ஆர்டர் மாணவர்களின் இமெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறுவதால் பெரிய அளவில் மாணவர்கள் கூடவில்லை. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி உதவி செய்வதற்கான பணியில் ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News