செய்திகள்
பால்கனி இடிந்து விழுந்துள்ளதை காணலாம்.

பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்

Published On 2019-06-26 06:08 GMT   |   Update On 2019-06-26 06:08 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிர வைசிய சமுதாயத்தினர் நிர்வகித்து வரும் வெள்ளியம்பலம் மேல் நிலைப்பள்ளி.

இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 9 மணிக்கு மேல்தான் பள்ளி தொடங்கும் என்பதால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் காலை 7 மணிக்கே பள்ளிக்கு வந்தனர்.

சரியாக 7.45 மணி அளவில் 12-ம் வகுப்பு மாணவர் வீரக்குமார், 11-ம் வகுப்பு மாணவர் சக்திவேல், குமாரவேல் பாண்டியன் ஆகிய 3 பேரும் முதல் தளத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் நின்றிருந்த பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. எதிர்பாராதவிதமாக 3 மாணவர்களும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மாணவன்

மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட ஆசிரியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த விளக்குத்தூண் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பால்கனி சுவர் இடிந்த நேரத்தில் மிக குறைந்த அளவு மாணவர்களே பள்ளிக்கு வந்திருந்தனர். 9 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்து இருந்தால் பல மாணவர்கள் இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி இருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பி விட்டனர்.

திடீர் விபத்து காரணமாக மாணவர்களின் பதட்டத்தை தவிர்க்கும் வகையில் இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வெளியே சிறிது நேரம் நின்று விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இடிந்து விழுந்த பகுதியில் மற்ற மாணவர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

தடுப்புச்சுவர் இடிந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News