செய்திகள்

கும்பகோணத்தில் டெல்லி இளம்பெண் கற்பழிப்பு - குற்றவாளியின் மனு தள்ளுபடி

Published On 2019-06-25 06:32 GMT   |   Update On 2019-06-25 06:32 GMT
கும்பகோணம் வங்கி பணிக்கு வந்த டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்து தஞ்சை மகளிர் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி இரவு அங்குள்ள தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பயிற்சிக்காக டெல்லியில் இருந்து வந்த இளம்பெண் ரெயில் நிலைய வாசலில் ஆட்டோவில் ஏறி தான் தங்கும் ஓட்டல் அறைக்கு செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பெண்ணை கும்பகோணத்தை சுற்றி வலம் வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ஓட்டலுக்கு செல்லாமல் ஆட்டோ டிரைவர் சுற்றி வருவதால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தன் தோழிகளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கும்பகோணம் செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் ஆள்நடமாட்டம் மற்றும் வெளிச்சம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோ டிரைவர் ஓடிவிட்டார்.

அப்போது தனியாக நடந்து வந்த அந்த பெண்ணை அங்கு குடிபோதையில் இருந்த 4 வாலிபர்கள் ஓட்டல் அறையில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இதை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என கூறி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி ஓட்டலில் இறக்கி விட்டுள்ளனர்.

இதுகுறித்து தன்தோழிகளிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த தனியார் வங்கி அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அதன்பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அன்பரசு, தினேஷ், புருஷேத்தமன், வசந்த் ஆகிய 4 பேரை கைது செய்து கும்பகோணம் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கும்பகோணத்திற்கு வங்கி பணிக்கு வந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி புருஷோத்தமன் சார்பில் தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்த வழக்கிற்கும் புருஷோத்தமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை வேண்டுமென்றே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த வழக்கில் இருந்து இவரை விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பினர் புருஷோத்தமன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். அந்த ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை செய்த நீதிபதி (பொறுப்பு) ராஜவேல் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News