செய்திகள்

தக்கலையில் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் வாலிபர் சிக்கினார்

Published On 2019-06-25 05:22 GMT   |   Update On 2019-06-25 05:22 GMT
குமரி மாவட்டம் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே 70-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை:

குமரி மாவட்டம் தக்கலை பழைய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று இரவு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதுபற்றி பொதுமக்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் 70-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஏ.டி.எம். கார்டுகள் குறித்து அவரிடம் விசாரித்தபோது அவரால் எந்தவொரு தெளிவான பதிலையும் கூற முடியவில்லை.

இதனால் அவர் வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை திருடி பணம் திருடும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தக்கலை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் சமீபத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது. அதில் பதிவாகி இருந்த கொள்ளையன் உருவமும், தற்போது ஏ.டி.எம். கார்டுகளுடன் சிக்கிய வாலிபரின் உருவமும் ஒரே மாதிரியாக இருந்தன. இதனால் அந்த கடையில் கைவரிசை காட்டியது இந்த நபரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதா? அல்லது பழைய ஏ.டி.எம். கார்டுகளா? என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News