செய்திகள்

விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

Published On 2019-06-25 04:58 GMT   |   Update On 2019-06-25 04:58 GMT
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை, ஜூன்.25-

விழுப்புரம் மாவட்டத் தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. உளுந்தூர் பேட்டை, ஆசனூர், எலவனாசூர்கோட்டை, செங்குறிச்சி, களமருதூர், காட்டுநெமிலி, ஏ.குமார மங்கலம், சேந்தநாடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. ஏ.குமாரமங்கலத்தை சேர்ந்த முருகன்(வயது 39) என்ற விவசாயி வயல்வெளியில் நின்று கொண்டிருந்தார். அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல்கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அன்னை சத்தியா தெருவில் கோதண்டபாணி என்பவரது வீட்டு முன் கட்டப்பட்டிருந்த பசுமாடு மீது மின்னல் தாக்கியது. இதில் பசுமாடு இறந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று 102 டிகிரிக்குமேல் வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

நேற்று இரவு 9.30 மணியளவில் கடலூரில் திடீரென்று சூறாவளிக் காற்று வீசியது. திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

கடலூர், திருப்பாதிரிப் புலியூர், மேல்பட்டாம் பாக்கம், நெல்லிக்குப்பம், நடுவீரப்பட்டு போன்ற பகுதிகளில் பலத்த மழை 1 மணிநேரம் கொட்டியது. இதனால் ரோட்டில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளிக்காற்று வீசியதால் நகரின் பல இடங்களில் இரவு 10 மணியளவில் மின்தடை ஏற்பட்டது.

பண்ருட்டி, திருவதிகை, புதுப்பேட்டை, அண்ணா கிராமம், கண்டரக் கோட்டை, காடாம்புலியூர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு 8 மணியளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகர் பகுதியில் தணிகாசலம் என்பவர் கூரைவீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று இரவு திடீரென்று மின்கசிவு ஏற்பட்டது. இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

Tags:    

Similar News