செய்திகள்

தண்ணீருக்காக பெண்கள் காத்து கிடக்கும் நிலை உருவாகியுள்ளது- கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2019-06-24 10:51 GMT   |   Update On 2019-06-24 10:51 GMT
தண்ணீருக்காக பெண்கள் காத்து கிடக்கும் நிலை உருவாகியுள்ளது என்று விளாத்திகுளத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார்.

விளாத்திகுளம்:

சீராக குடிநீர் வழங்க கோரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விளாத்திகுளம் மார்க்கெட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களுக்கு தண்ணீர் போய் சேரக்கூடிய எந்த முயற்சியை இந்த அரசாங்கம் எடுத்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய, அவர்களோடு இணைந்து பாடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். கேரள அரசாங்கம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியதை, தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்று கூறி இந்த அரசு வாங்க மறுத்துவிட்டது.

கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுக்கப்படும் தண்ணீரை வாங்கினால் மத்திய அரசு கோபப்படும் என நினைத்து மறுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் அடையாளம் என்று தற்போது கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருவது பிளாஸ்டிக் குடங்கள் தான். எங்கு பார்த்தாலும் பெண்கள் தண்ணீருக்கு காத்து கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை இந்த அரசு பராமரிக்கவும் இல்லை. முக்கிய திட்டங்களை நிறைவேற்றவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்துக்கு பின்னர் விளாத்திகுளம் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. இதனை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News